Contact Us

Name

Email *

Message *

Friday 21 February 2014

மஹா சிவராத்திரி விரதம் தரும் முக்தி

தியும் அந்தமும் இல்லாத அரும் பெரும் ஜோதி ரூபத்தில் இருந்து, லிங்கமாக வெளிவந்து, சிவபெருமான் அருளிய புண்ணியநாளே மஹா சிவராத்திரி எனப்படுகிறது. இந்த நாளில், நடு இரவில் தரிசனம் தருகிறார் பரமேஸ்வரன்.

உலகுக்கு பிரளயம் மிக அவசியம். அப்போது உலகம், சிவபெருமானிடம் ஒடுங்கும். அந்த நாளே சிவராத்திரி. அன்று சிவபெருமானை தவிர வேறு எவரும்- எதுவும் இல்லை. ஆனால், சிவனை விட்டு என்றும் பிரியாத சக்தி மட்டும் உடன் இருப்பதாக ஐதீகம்.

மாசி மாதம், கிருஷ்ண பட்சத்தில் வரும் சிவராத்திரி, நாம் நலமுடன் இருப்பதற்காக சிவனையும் சக்தியையும் பூஜிக்க வேண்டிய திருநாள். நமக்காக பார்வதிதேவியும், சிவபெருமானை பூஜித்த இந்த நாளில், நாமும் முறைப்படி விரதம் இருந்து சிவபெருமானை பூஜித்து வழிபட... சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். 'அன்று இரவு விரதம் இருந்து கண் விழித்து, நான்கு கால பூஜையும் செய்பவருக்கு முக்தி தரவேண்டும்!' என பார்வதி தேவி வேண்டிக் கொள்ள சிவபெருமானும் அவ்வாறே வரம் தந்தாராம். எனவே, சாதாரண தினங்களில் பூஜிப்பதை விட, சிவராத்திரி அன்று செய்யப்படும் பூஜை பன்மடங்கு பலனைத் தரும். நந்தி தேவருக்கு, சிவராத்திரியின் மகிமையை சிவபெருமானே உபதேசித்து அருளினார். பின்னர் நந்திதேவர் சிவகணங்களுக்கும் முனிவர்களுக்கும் உபதேசித்தார்.

இத்தனை மகிமைகள் கொண்ட சிவராத்திரி விரதத்தை, பிரம்மா, விஷ்ணு, பார்வதி, ஆதிசேஷன், சரஸ்வதி ஆகியோர் அனுஷ்டித்துள்ளனர்.

பிரளயத்தின்போது எல்லாம் சிவானாரிடம் ஒடுங்கி விட... எங்கும் இருள் சூழ்ந்தது. அப்போது உலக உயிர்கள் உய்வடையும் பொருட்டு உமாதேவியார், நான்கு ஜாமங்களிலும் சிவபெருமானை முறைப்படி பூஜித்தாராம். அதன் பலனால் உலகத்தில் மீண்டும் சிருஷ்டி துவங்கியது. இதன் அடிப்படையிலேயே சிவராத்திரி அன்று சிவாலயங்களில் நான்கு ஜாம பூஜைகள் நடைபெறுகின்றன. அப்போது, சிவலிங்கத்துக்கு ருத்ர ஜபத்துடன் நடைபெறும் அபிஷேகங்களை காண கண்கோடி வேண்டும். சிவ பூஜையை முறைப்படி கற்றவர்கள், தமது இல்லங்களிலும் லிங்கத்துக்கு (நான்கு காலமும்) அபிஷேக ஆராதனைகள் புரியலாம்.

சிவராத்திரி விரதம் இருப்பவர்கள், முதல் நாளே சிவபூஜைக்கு வேண்டியவற்றை சேகரித்துக் கொண்டு, விடியற்காலையில் எழுந்து நித்தியக் கடன்களை முடித்து, நீராடி, சிவாலயத்துக்குச் சென்று வழிபட வேண்டும். அருட் பாடல்களைப் பாடி, சிவபுராணம் பாராயணம் செய்து உண்ணா நோன்பு இருக்க வேண்டும். இரவில் தூங்காமல் சிவ நாமம் கூறி, சிவ கதைகளைக் கேட்டு நான்கு ஜாமங்களிலும் பூஜை செய்தால், சிவனருளால் அனைத்து நலனும், இறந்த பின் முக்தியும் கிடைக்கும். சிவராத்திரி தின பூஜையைக் கண்ட அரக்கர்களும் 'சிவ சிவ' என்று கூறி, லிங்கத்தின் மீது வில்வ இலை களைப் போட்டதால், பாவங்கள் அகன்று நற்கதி அடைந்ததாக புராணங்கள் கூறும்.

மாசி மாதத்தில்தான், ஈசனின் விசேஷத் திருநாளான 'மஹா சிவராத்திரி' அமையப் பெற்றுள்ளது. தட்சிணாயன காலத்தில் கோகுலாஷ்டமியில், நள்ளிரவில் உலகை ரட்சிக்க அவதரித்தார் மஹாவிஷ்ணு. அடுத்து உத்தராயண காலத்தில் மாசி மாத கிருஷ்ண பட்ச சதுர்த்தசி அன்று அதே நள்ளிரவில், உலகை உய்விக்க 'லிங்கோத்பவ மூர்த்தி'யாக அவதரித்தார் சிவபெருமான்! ஹரியும் ஹரனும் ஒன்றுக்குள் ஒன்றான கடவுளர் என்பதற்கு இதைவிட வேறு விளக்கம் வேண்டுமோ?

லிங்க ரூபமானது இரவில் ஆவிர்பவித்த மஹா (சதுர்த்தசி) சிவராத்திரி. ஸ்ரீருத்ர ப்ரச்னம்தான் வைதிகமான சிவ ஸூக்தங்களில் முக்யமாக இருப்பது. அதில் த்யான ச்லோகத்தில் என்ன சொல்லியிருக்கிறதென்றால்:

ஆபா தாள-நப: ஸ்தலாந்த-புவன-ப்ரஹ்மாண்ட மாவிஸ்புரஜ்
ஜ்யோதி: ஸ்பாடிக லிங்க-மௌளி விலஸத்- பூர்ணேந்து வாந்தாம்ருதை:|

அஸ்தோகாப்லுத-மேக-மீச-மநிசம் ருத்ராநுவாகாஞ் ஜபந்
த்யாயேத் ஈப்ஸித ஸித்தயே (அ)த்ருத-பதம் விப்ரோ (அ)பிஷிஞ்சேச் சிவம் ||

பாதாள முதல் ஆகாச பரியந்தம் எல்லையில்லாத ஜோதி ஸ்வரூபமாகப் பிரகாசிக்கிற ஸ்படிக லிங்கத்துக்கு அபிஷேகம் பண்ண வேண்டும் என்று சொல்லியிருக்கிறது. ஸ்படிக லிங்கத்துக்கு ஒரு வர்ணமும் சொல்ல முடியாது. எந்த வஸ்துவை அதில் வைக்கிறோமோ அதனுடைய வர்ணத்தை அது பிரதிபலிக்கும். குண தோஷம் இல்லாதது அது. ஞானம் எப்படிப் பரிசுத்தமாக இருக்கிறதோ, அப்படி அந்த ஸ்படிக லிங்கம் இருக்கிறது. அதன்பின் பச்சை வில்வத்தை வைத்தால், லிங்கமே பச்சையாகத் தோன்றும். சிவப்பான அரளியை வைத்தால் சிவப்பாகத் தோன்றும். அது நிர்விகாரமானது.

பரப்பிரம்ம ஸ்வரூபம் நிர்விகாரமாக இருந்தாலும், நம்முடைய மனோபாவத்தை எப்படி வைக்கிறோமோ அப்படித் தோன்றும் என்பதற்கு திருஷ்டாந்தமாக இந்த ஸ்படிக லிங்கம் இருக்கிறது. மேலே சொன்ன சுலோகப்படி, அதன் சிரஸில் பூரண சந்திரன் இருக்கிறது. பூர்ணேந்து என்று சுலோகத்தில் வருவது. ‘பூரண இந்து’: இந்து என்றாலும், சந்திரன் என்றாலும் ஒன்றுதான். ஈஸ்வரன் ஜடையும், கங்கையும், கண், காது, மூக்கு, கை, கால் முதலிய அவயங்களும் கொண்ட ‘ஸகள’ ரூபத்தில் வருகிற போது, அவர் மூன்றாம் பிறையை வைத்துக் கொண்டு சந்திரமௌளியாக இருக்கிறார். ரூபமே இல்லாத பரமாத்மா, நிஷ்கள தத்வமாயிருக்கிறபோது அங்கே சந்திரன், கங்கை எதுவுமில்லை. அரூபமாயும் இல்லாமல் ஸ்வரூபமாயும், அவயங்களோடு இல்லாமல் லிங்கமாக, சகள - நிஷ்களமாக இருக்கிறபோது அவர் பூரண சந்திரனை உச்சியில் வைத்திருக்கிறார். அதிலிருந்து அமிர்தமே கங்கை மாதிரி கொட்டுகிறது.யோகிகள் தமது சிரசுக்குள் சகஸ்ரார கமலத்தில் உள்ள சந்திர மண்டலத்தில், ஜ்யோதி ஸ்வரூபத்தைத் தியானம் பண்ணுவார்கள். அந்தச் சந்திர பிம்பத்திலிருந்து அமிர்தம் ஒழுகும். அதனால் அவர்களுக்குப் பரமானந்தம் உண்டாகிறது. ஸமஸ்த ஸ்வரூபமான ஜ்யோதிர்லிங்கம் குளிர்ந்தால், லோகமெல்லாம் குளிரும். இதனால்தான் சிவலிங்கத்துக்கு ஒயாமல் அபிஷேகம் செய்வது, ருத்திர அபிஷேகம் செய்வது. ருத்திர அபிஷேகத்துக்கு முன்பு சொல்லும் ஸ்லோகம், இதை எல்லாம் அறிவுறுத்துவது.உருவத்தைப் பார்த்து ஆனந்தம் அநுபவிக்கிற நமக்கு, உருவத்தோடு கண்டால்தான் ஆனந்தம் உண்டாகும்.

ஆசார்யாளுக்கு ஐந்து ஸ்படிக லிங்கங்களைக் கொடுத்தார் ஸ்வாமி. இந்த விஷயம் இதிஹாஸ-புராணங்களை (முறையே) சேர்ந்த ‘சிவ ரஹஸ்யம்’, ‘மார்க்கண்டேய ஸம்ஹிதை’ ஆகிய இரண்டிலும் இருக்கிறது. சிவ ரஹஸ்யத்தில் இது காசியில் நடந்ததாகச் சொல்லியிருந்தாலும், அவை கைலாஸ லிங்கங்கள் என்றே இருக்கிறது. அவற்றைப் பிற்பாடு ஆசார்யாள் எங்கெங்கே ப்ரதிஷ்டை பண்ணினாரென்ற விவரம் ‘மார்க்கண்டேய ஸம்ஹிதை’யில் கொடுத்திருக்கிறது. யோகலிங்கம் இந்த (காஞ்சி) மடத்தில்; போகலிங்கம் ச்ருங்கேரி மடத்தில்; வரலிங்கம் நேபாளத்தில் நீலகண்ட கே்ஷத்ரத்தில்; முக்தி லிங்கம் கேதாரிநாத்தில்; மோக்ஷ லிங்கம் சிதம்பரத்தில். அது ஸ்படிக லிங்கமாக இருந்ததில் ரொம்ப அர்த்தமுண்டு.

அதற்காகத்தான் உருவமற்ற பரமேசுவரன், அருவுருவான லிங்கமானதோடு நில்லாமல், அந்த லிங்கத்துக்குள்ளேயே திவ்விய ரூபம் காட்டும் லிங்கோத்பவ மூர்த்தியாக இருக்கிறார். இப்படி ரூபத்தைக் காட்டினாலும், வாஸ்தவத்தில் தமக்கு அடியும் இல்லை. அதாவது, ஆதியும் அந்தமும் அற்ற ஆனந்த வஸ்துவே தாம் என்று உணர்த்துவதற்காக, மேலே லிங்க வட்டத்துக்குள் ஜடாமுடி முடியாமலும், கீழே அந்த மாதிரி தம் பாதம் அதற்குள் அடங்காமலும் இருப்பதாகக் காட்டுகிறார்.அடிமுடி எல்லை இல்லாமல், அவர் ஜ்யோதி ஸ்வ ரூபமாக நின்றார். ஜ்யோதிர்லிங்கமாக, ஆகாயத்துக்கும் பூமிக்குமாக பரமசிவன் உத்பவித்த இரவே சிவராத்திரியாகும். அப்படி ஜ்யோதிஸ்வரூபமாகப் பரமேசுவரன் நின்றபொழுது, விஷ்ணு அவரது பாதத்தைப் பார்க்க பாதாளத்துக்குப் போனார். பூமியைக் கல்லும் ஸ்வபாவம் வராஹத்துக்கு உண்டு. எனவே, அந்த ரூபத்தை எடுத்துக் கொண்டார். பிரம்மா, ஹம்ஸ ஸ்வரூபமானவர். பட்சிக்குப் பறப்பது ஸ்வபாவம். பட்சியாகப் பறந்து ஜோதிர்லிங்கத்தின் முடி தேடிப் போனார். இரண்டு பேருக்கும், தேடிப் போனவை அகப்படவில்லை.

இப்படிச் சொல்வதின் தாத்பரியம் என்னவென்றால், பரமாத்மா சிருஷ்டி, பரிபாலனம் எல்லாவற்றையும் கடந்த வஸ்து என்பதுதான். இப்படி அடி முடி தேடி பிரம்மாவும் விஷ்ணுவும் பெற முடியாதவரையே, என் சாமர்த்தியத்தால் அறிய முடியும் என்கிற அகங்காரமில்லாமல் அன்போடு பக்தி செய்து உருகினால், வெகு சுலபத்தில் அவர் நமக்கு அகப்பட்டு விடுவார். அன்பினாலே மிகமிக திருப்தி பெற்று அநுக் கிரகிப்பவர் சிவபெருமான் என்பதாலேயே, அவருக்கு ஆசுதோஷி என்று ஒரு பெயர் இருக்கிறது. ஆசுகவி என்றால், கேட்டவுனேயே கவி பாடுகிறவர் அல்லவா? இப்படியே ஸ்மரித்த மாத்திரத்தில் சந்தோஷித்து அநுக்கிரகம் பண்ணுகிற வள்ளல்தான் ஆசுதோஷி.சகல பிரபஞ்சமும் அடங்கியிருக்கிற லிங்க ரூபமானது ஆவிர்பவித்த சிவராத்திரி மஹா சதுர்த்தசி இரவில், அவரை அப்படியே ஸ்மரித்து ஸ்மரித்து அவருக்குள் நாம் அடங்கியிருக்க வேண்டும். அதைவிட ஆனந்தம் இல்லை.

Also read: Sri Rudra Roopam Dhyanam



நன்றி: ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி பாலசுப்ரமணியன்

No comments:

Post a Comment